கொரோனா தடுப்பு பணி-வளர்ச்சி திட்டங்கள் ஆய்வு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தூத்துக்குடி வருகை


கொரோனா தடுப்பு பணி-வளர்ச்சி திட்டங்கள் ஆய்வு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தூத்துக்குடி வருகை
x
தினத்தந்தி 11 Oct 2020 11:38 PM GMT (Updated: 11 Oct 2020 11:38 PM GMT)

கொரோனா தடுப்பு பணி-வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார்.

தூத்துக்குடி,

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆய்வுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையே பிரதமர் மோடியுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதால், முதல்-அமைச்சரின் தூத்துக்குடி வருகை தள்ளி வைக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் வருகை

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி வருகிறார்.

அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காலை 10.15 மணிக்கு வருகிறார். தொடர்ந்து தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் அவர், பின்னர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்து, புற்றுநோய் சிகிச்சை கருவியை இயக்கி தொடங்கி வைக்கிறார்.

ரூ.1,000 கோடி வளர்ச்சி திட்டங்கள்

பின்னர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு மாற்றுத்திறனாளிகள் நடத்தி வரும் ஸ்மார்ட் கிச்சனை பார்வையிடுகிறார். தொடர்ந்து அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்கிறார். பின்னர் மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அப்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு சி.டி.யை வெளியிடுகிறார்.

உற்சாக வரவேற்பு

தூத்துக்குடிக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விமான நிலையம் முதல் தூத்துக்குடி வரையிலும் பிரமாண்ட வரவேற்பு அலங்கார வளைவுகளும், கட்சிக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story