நடப்பு பருவத்தில் இதுவரை 73 லட்சத்து 245 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் அமைச்சர் காமராஜ் தகவல்


நடப்பு பருவத்தில் இதுவரை 73 லட்சத்து 245 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2020 5:28 AM IST (Updated: 12 Oct 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு பருவத்தில் இதுவரை 73 லட்சத்து 245 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பில் நீர்நிலை புறம்போக்கில் உள்ள மீள்குடியேற்ற பயனாளிகளுக்கு குடியிருப்பு வீடுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவி மற்றும் வீட்டுமனை பட்டாவினை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ராஜன், உதவி கலெக்டர்கள் பாலசந்திரன், புண்ணியகோட்டி, உதவி பொறியாளர்கள் சீனிவாசன், மாரிமுத்து, சிங்காரவேல், இளநிலை பொறியாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரூ.1600 கோடி மதிப்பில்....

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள வெண்ணாறு உப வடிநிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுக்கு ஏற்ப மேம்படுத்திடும் வகையில் மழைக் காலங்களில் தண்ணீர் வீணாகாமலும், கடல் நீர் உட்புகாமல் தடுப்பது, கரைகளை மேம்படுத்துவது ஆகியவற்றை நிறைவேற்றிட திட்டமிடப்பட்டு ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த உத்தரவிட்டார்.

அந்த வகையில் முதல் கட்டமாக ரூ.960 கோடி திட்ட மதிப்பீட்டில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள ஆறுகளான அரிச்சந்திரா நதி, அடப்பார், பாண்டவையாறு, வெள்ளையாறு, வளவனார் கால்வாய் மற்றும் வேதாரண்யம் கால்வாய்கள் சீரமைக்கப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஆறு, கால்வாய், மற்றும் வடிகால் கரைகளில் உள்ள அனைத்துவித ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டி கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டது.

வீடுகள் கட்டும் பணி

இதில் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,237 வீடுகள் இந்த திட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகும் என்பதை கண்டறியப்பட்டு, அவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் செலவில் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 751 குடும்பங்களுக்கு குடியிருப்பு வீடுகள் ரூ.71 கோடியே 34 லட்சத்து 50 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டத்தில் 28 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

திட்ட பாதிப்புள்ளாகும் பயனாளிகளுக்கு அவர்களின் விருப்ப தேர்வின் அடிப்படையில் 486 பயனாளிகள் இழப்பீட்டு தொகை வழங்க கோரியுள்ளனர். அந்த வகையில் இதுவரை 422 பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.7 கோடியே 41 லட்சத்து 33 ஆயிரத்து 581 வழங்கப்பட்டுள்ளது. தற்போது 152 மீள் குடியேற்ற பயனாளிகளுக்கு ரூ.14 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகளுக்கான சாவி மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கான வீட்டுமனைப்பட்டாவும் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல்

அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக்கான குறுவை பருவத்தில் இதுவரை 73 லட்சத்து 245 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்கள் என 858 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 239 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், தஞ்சை மாவட்டத்தில் 267, நாகை மாவட்டத்தில் 149 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான உரம், இடுபொருட்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story