சேவூர் போலீஸ் நிலைய நிறுத்தம் வரை டவுன் பஸ்கள் வந்து செல்லுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சேவூர் போலீஸ் நிலைய நிறுத்தம் வரை டவுன் பஸ்கள் வந்து செல்லுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 4:01 AM GMT (Updated: 12 Oct 2020 4:01 AM GMT)

சேவூர் போலீஸ் நிலைய நிறுத்தம் வரை டவுன் பஸ்கள் வந்து செல்லுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சேவூர்,

அவினாசி தாலுகா சேவூர் ஊராட்சியில், ராக்கம்பாளையம், கிளாகுளம், சந்தையப்பாளையம், காமராஜ் நகர், பாளியக்காடு, ஒச்சாம்பாளையம், கன்னடாங்குளம், சேவூர் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள முறியாண்டம்பாளையம் ஊராட்சி, பாப்பாங்குளம் ஊராட்சி, வேட்டுவபாளையம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சேவூருக்கு வந்துதான் எங்கு செல்வதானாலும் பஸ்களில் ஏறி செல்ல வேண்டும்.

இப்பகுதி மக்கள் பெரும்பாலனோர் பனியன் தொழிலையே நம்பி வாழ்ந்து வருவதால் அதிகபட்சமாக சேவூரிலிருந்து திருப்பூருக்கு பஸ்கள் மூலம் செல்ல வேண்டியது உள்ளது. இதேபோல, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், கோவை, திருப்பூர், கோபி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரி, மற்றும் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

சேவூரில் பிரதான பஸ் நிறுத்தமாக, சேவூர் போலீஸ் நிலையம், சேவூர் கைகாட்டி ரவுண்டானா, என இரண்டு பஸ் நிறுத்தங்கள் இருக்கின்றன. இதில் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதி சேவூரின் ஆரம்ப எல்லை பகுதியாகும். கைகாட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து வடக்கே ஒரு கிலோ மீட்டர் வரை சேவூர் பகுதி உள்ளது. இதில் சேவூரின் மையப்பகுதியாக சேவூர் போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் உள்ளது.

இதுவரை திருப்பூரிலிருந்து வரும் டவுன் பஸ்கள் போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் வரை வந்து சென்றது. திருப்பூரிலிருந்து சேவூர் வரை வரும் டவுன் பஸ்கள், அவினாசி வழியாக சேவூர் கைகாட்டி ரவுண்டானா பஸ் நிறுத்தம் வந்து பின்னர் சேவூர் போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் வரை வந்து செல்ல வேண்டும்.

ஆனால் தனியார் மற்றும் அரசு டவுன் பஸ்கள் கைகாட்டி ரவுண்டானாவுடன் திரும்பி செல்கிறது. இதனால், சேவூர் வடக்குவீதி, சந்தையப்பாளையம், ராக்கம்பாளையம், சிந்தாமணிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியது உள்ளது. இதேபோல் டவுண் பஸ்கள் போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் வரை வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பயணிகள் டவுன் பஸ் சேவூர் கைகாட்டி ரவுண்டானாவுடன் திரும்பி செல்வதால் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைகின்றனர்.

இதனால் அவசரமாக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்பவர்கள் அந்த இடத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் பயணிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள், பயணிகளின் நலன் கருதி அனைத்துப்பஸ்களும் சேவூர் போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் வரை வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story