வருவாய்த்துறை சான்றிதழ் பெற அலைமோதும் மக்கள் கூட்டம் கொரோனா தொற்று பரவும் அபாயம்


வருவாய்த்துறை சான்றிதழ் பெற அலைமோதும் மக்கள் கூட்டம் கொரோனா தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 13 Oct 2020 4:15 AM IST (Updated: 13 Oct 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறையின் சான்றிதழ் பெற பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் பள்ளி படிப்பினை முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் சாதி, இருப்பிட சான்றிதழ் மிகவும் அவசியமானதாகும். தற்போது கொரோனா காலம் என்பதால் இந்த சான்றிதழ்களை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு வருவாய்த்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் நேரிலும் விண்ணப்பித்து சான்றிதழை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால் அரசு அலுவலகங்களுக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இருப்பதில்லை

இதற்கிடையே ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு சான்றிதழ் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் நேரடியாக விண்ணப்பித்து சான்றிதழ் பெறவே பலர் விரும்புகின்றனர். இதற்காக மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர் நாள்தோறும் நூற்றுக் கணக்கில் தாசில்தார் அலுவலகங்களில் கூடுகின்றனர்.

ஆனால் பல நேரங்களில் கொரோனா பணியின் காரணமாக கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் தங்கள் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று விடுகின்றனர். ஒரு சில நேரங்களில் கிராம நிர்வாக அதிகாரி இருந்தால், வருவாய் ஆய்வாளர் இருப்பதில்லை. அவர்கள் இருவரும் இருந்தால் தாசில்தார் இருப்பதில்லை.

தொற்று பரவும் அபாயம்

இதனால் வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்துக்கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை உள்ளதால் அரசு அலுவலகங்களில் பலருக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Next Story