தனது அரசின் வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளை தொழில் முனைவோர்களாக மாற்ற உதவும் பிரதமர் மோடி பேச்சு


தனது அரசின் வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளை தொழில் முனைவோர்களாக மாற்ற உதவும் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2020 3:06 AM IST (Updated: 14 Oct 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

தனது அரசின் வரலாற்று சிறப்புமிக்க வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்ற உதவும் என பிரதமர் மோடி பேசினார்.

மும்பை,

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் மராட்டிய மாநிலம் அகமது நகரை சேர்ந்த மறைந்த மத்திய மந்திரி பாலாசாகேப் விகே பாட்டீலின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார். இதேபோல அகமதுநகரில் உள்ள பரவரா ஊரக கல்வி நிலையத்திற்கு பாலாசாகேப் விகே பாட்டீலின் பெயரை சூட்டினார்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

உற்பத்தியில் கவனம்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு போதிய உணவு பொருள்கள் இருப்பு நம்மிடம் இல்லை. எனவே அரசுகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் அளித்து வந்தன.

அரசுகளின் முழு கவனமும், கொள்கைகளும் உற்பத்தியை அதிகரிப்பதிலேயே இருந்தது. கடுமையாக உழைத்து உணவு உற்பத்தியில் விவசாயிகள் சதித்து காட்டினார்கள். அவர்கள் நமக்கு சோறு படைத்தார்கள்.

ஆனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க செய்ய அரசுகள் முன்வரவில்லை. அவர்கள் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டனர்.

தொழில் முனைவோர்கள்

முதல் முறையாக எங்களது அரசில் இந்த சிந்தனை மாறி உள்ளது. நாங்கள் கொண்டு வந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளை தொழில் முனைவோர்களாக மாறும் வாய்ப்பை வழங்கி உள்ளது. மேலும் எனது அரசு விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

பட்டியலிட்டார்

மேலும் பிரதமர் மோடி தனது தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு பேசினார்.

இதுதவிர கொரோனா தடுப்பூசி வரும் வரை அலட்சியம் காட்டாமல் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பாலாசாகேப் விகே பாட்டீலின் மகன் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story