புதுவை மக்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக பணம் நாராயணசாமி தகவல்


புதுவை மக்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக பணம் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2020 4:17 AM IST (Updated: 14 Oct 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் பொதுமக்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சரக்கு மற்றும் சேவை வரியின் இழப்பீடாக 6 மாதத்துக்கு ரூ.798 கோடியை மத்திய அரசு நமக்கு தரவேண்டியுள்ளது. தற்போது நடந்த கூட்டத்தில் அந்த நிதியை தர 9 மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. பா.ஜ.க. ஆளும் 12 மாநிலங்கள் வெளியில் கடன் வாங்கலாம் என்றனர்.

ஆனால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எந்த முடிவும் எடுக்காமல் கூட்டத்தை முடித்தார். மத்திய அரசு நேரடியாக ரிசர்வ் வங்கியில் கடன் வாங்க அதிகாரம் உள்ளது. ஆனால் மாநில அரசுகள் கடன்வாங்க வேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டும். எனவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 9 மாநிலங்களும் சேர்ந்து முடிவு செய்வோம். சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் விதிப்படி ஒருமித்த முடிவுகள் ஏற்படாவிட்டால் அதை வாக்கெடுப்புக்கு விடவேண்டும். வாக்கெடுப்பில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால்தான் அதை நிறைவேற்ற முடியும். ஆனால் அந்த விதிமுறைகளையும் மத்திய அரசு மீறியுள்ளது.

சி.பி.ஐ. கைவிரிப்பு

புதுவை கவர்னர் கிரண்பெடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக ஒரு சில கருத்துகளை கூறி மக்களுக்கு தீபாவளி பரிசு என்று கூறியிருந்தார். சென்டாக் மாணவர் சேர்க்கையின்போது அப்போதைய அரசு செயலாளர்கள் நரேந்திரகுமார், பாபு மற்றும் அதிகாரிகளான ராமன், கோவிந்தராஜ் ஆகியோர் விதிமுறைகளுக்கு உட்பட்டு நமது மாநில மாணவர்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு பரிந்துரை செய்தார்கள்.

ஆனால் அவர்களது பரிந்துரையை ஏற்காமல் தனியார் கல்லூரிகள் தன்னிச்சையாக செயல்பட்டன. கவர்னர் கிரண்பெடி அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சி.பி.ஐ.க்கு புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்று சி.பி.ஐ. கைவிரித்தது. தன்னிச்சையாக செயல்பட்ட தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசும், தனிப்பட்ட முறையில் நானும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதினோம். பொய் புகாரால் ஏற்பட்டஅதிகாரிகளின் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

கிரண்பெடி தடுத்தார்

புதுவையில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுத்தால் அதை குடும்ப தலைவர்கள் தவறான வழியில் செலவழித்து விடுகிறார்கள் என்பதால்தான் இலவச அரிசி வழங்கவேண்டும் என்றோம். இந்த முறைதான் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டது. ஆனால் கவர்னர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டு மத்திய அரசு வங்கிக் கணக்கில் பணம் போட வேண்டும் என்கிறது. ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு என்கிறார்கள். எல்லா மாநிலத்திலும் இலவச அரிசி வழங்கும் சூழலில் புதுவையில் எப்படி அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்?

புதுவை மக்களுக்கு அரிசி வழங்க இந்திய உணவுக்கழகம் மூலம் அரிசி தருவதாக மத்திய மந்திரியாக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் கூறினார். ஆனால் அதை மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கவர்னர் கிரண்பெடி தடுத்து நிறுத்தினார். இலவச அரிசி வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டு தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளேன். புதுவையில் 95 சதவீத மக்கள் இலவச அரிசிதான் வேண்டும் என்கிறார்கள். அரிசி வழங்குவதில் தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.

அரிசிக்கு பதில் பணம்

எங்கள் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்பதால் அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு கவர்னர் அதை தடுக்கிறார். கவர்னர் மாளிகை பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது. மக்களுக்கு விரோதமாக செயல்படுவதை கவர்னர் கிரண்பெடி நிறுத்திக்கொள்ள வேண்டும். தற்போது இலவச அரிசி வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே அதற்கு பதிலாக வழக்கு முடியும் வரை பொதுமக்களுக்கு பணம் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் உடனிருந்தார்.

Next Story