காக்கிநாடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தம் கரையை கடந்தது ஏனாமில் பலத்த மழை; மரங்கள் வேரோடு சாய்ந்தன


காக்கிநாடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தம் கரையை கடந்தது ஏனாமில் பலத்த மழை; மரங்கள் வேரோடு சாய்ந்தன
x
தினத்தந்தி 14 Oct 2020 4:31 AM IST (Updated: 14 Oct 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

காக்கிநாடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தம் கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் பலத்த மழை பெய்ததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

புதுச்சேரி,

மேற்கு மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா நோக்கி நகர்ந்தது.

கடைசி 6 மணி நேரத்தில், மணிக்கு 24 கி.மீ. வேகத்தில் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவை நெருங்கியது.

நேற்று காலை 6½ மணிக்கும், 7½ மணிக்கும் இடையே காக்கிநாடா அருகே ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

பலத்த மழை

இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 11.5 செ.மீ. முதல் 24 செ.மீ. வரை கனமழை பெய்தது. அதிக அளவாக, கிழக்கு கோதாவரி மாவட்டம் தல்லரேவு என்ற இடத்தில் 24.3 செ.மீ. மழை பெய்தது.

இந்த மழையால், பலத்த சேதம் ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி மாவட்டம் பொம்முரு கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியானார். கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், விழியாநகரம், விசாகப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்தது.

கப்பல், படகுகள்

கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த வங்காளதேச சரக்கு கப்பல், காற்றில் அடித்துச் செல்லப்பட்டது. விசாகப்பட்டினம் தென்னட்டி பார்க் கடற்கரையில் கரை ஒதுங்கியது. அதில் இருந்த 15 சிப்பந்திகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீனவர்களின் படகுகளும் கரைக்கு அடித்துச்செல்லப்பட்டன. நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.

காக்கிநாடா துறைமுகத்தில் 13 சர்வதேச கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சரக்கு ஏற்றும் பணியும், இறக்கும் பணியும் தடைபட்டது.

வெள்ளக்காடான ஏனாம்

ஆந்திர மாநில பகுதியில் உள்ள புதுவை மாநிலத்தின் மற்றொரு பிராந்தியமான ஏனாமிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக ஏனாம் பிராந்தியம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தெருக்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மரங்கள் சாய்ந்தன

காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டு மின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு மற்றும் பொதுப்பணி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மண்டல நிர்வாக அதிகாரிக்கு அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான மல்லாடிகிருஷ்ணாராவ் உத்தரவிட்டுள்ளார். நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் ஏனாமில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Next Story