கரும்புக்கு நிலுவைத்தொகை வழங்கக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்


கரும்புக்கு நிலுவைத்தொகை வழங்கக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2020 5:28 AM IST (Updated: 14 Oct 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

கரும்புக்கு உரிய நிலுவை தொகையை வழங்கக்கோரி நேற்று தென்காசியில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உதவி கலெக்டரின் கடிதத்தால் போராட்டம் கைவிடப்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு கரும்புக்காக கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகை வழங்கக்கோரி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

உரிய பதில் கிடைக்காததால் இரவு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் முன்பு மேம்பாலத்தின் அடியில் சமையல் செய்து சாப்பிட்டு அங்கேயே அவர்கள் படுத்து உறங்கினார்கள். நேற்று காலையிலும் இந்த போராட்டம் தொடர்ந்தது. நேற்று அரை நிர்வாண கோலத்தில் தூக்கு போட்டு விவசாயிகள் கோஷமிட்டனர்.

இதற்கிடையே ஆலை நிர்வாகத்திடம் தென்காசி மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பலமுறை நடத்திய பேச்சுவார்த்தையில் ஆலை நிர்வாகம் விரைவில் நிலுவைத்தொகை வழங்கப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

உதவி கலெக்டர் கடிதம்

இந்த நிலையில் தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், தமிழக விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜாவுக்கு ஒரு கடிதத்தை நேற்று மாலையில் கொடுத்தார். அதில், தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி நிலுவைத்தொகை விரைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். மேற்குறிப்பிட்ட காலத்தில் நிலுவை தொகையை அளிக்க தவறும் பட்சத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை விவசாயிகள் பெற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story