நீர்ப்பாசனம், தொழிற்சாலைகளுக்கு மும்பை மழைநீரை பயன்படுத்துங்கள் முதல்-மந்திரிக்கு, நிதின் கட்காரி கடிதம்


நீர்ப்பாசனம், தொழிற்சாலைகளுக்கு மும்பை மழைநீரை பயன்படுத்துங்கள் முதல்-மந்திரிக்கு, நிதின் கட்காரி கடிதம்
x
தினத்தந்தி 15 Oct 2020 3:05 AM IST (Updated: 15 Oct 2020 3:05 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பாசனம், தொழிற்சாலைகளுக்கு மும்பை மழைநீரை பயன்படுத்துங்கள் என்று முதல்-மந்திரிக்கு, மந்திய மந்திரி நிதின் கட்காரி கடிதம் எழுதி உள்ளார்.

மும்பை,

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தில் மும்பை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் மராட்டியத்தை சேர்ந்த மந்திய மந்திரி நிதின் கட்காரி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மித்தி நதி பிரச்சினை

முறையாக திட்டமிட்டால் மும்பை மழைநீர் மற்றும் கழிவு நீரை அருகே உள்ள தானேயை நோக்கி திருப்பி விட முடியும். மேலும் வழியிலேயே அதனை சுத்திகரித்து அணையில் சேமித்து வைக்க முடியும்.

இந்த தண்ணீரை மும்பை நகரை சுற்றியுள்ள நீர்ப்பாசனம், தொழிற்சாலைகளுக்கும் மற்றும் நாசிக், அகமதுநகர் பகுதியில் தோட்டக்கலை வேலைகளுக்கும் பயன்படுத்தலாம்.

இந்த திட்டம் மூலம் மும்பையில் மித்தி நதியால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவும். இது பல ஆண்டுகளாக மும்பையின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. மேலும் மித்தி நதியில் தடுப்பணை கட்டப்பட வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்.

கான்கிரீட் சாலைகள்

தார் சாலைகள் பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்காது. எனவே தார் சாலைகளை சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக மாற்றும் நடவடிக்கையை மாநில அரசு கையில் எடுக்க வேண்டும்.

மும்பையில் கழிவு நீர் மற்றும் மழைநீரை எடுத்து செல்ல மேம்பட்ட வடிகால் அமைப்போடு கான்கிரீட் சாலைகளை அமைக்கலாம்.

மும்பையில் வெள்ளம், வடிகால் மேலாண்மை, கழிவுநீர், குடிநீர் போன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒருங்கிணைந்த திட்டத்தை வரவேற்கிறேன்.

இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணி சர்வதேச ஆலோசகர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் வெள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்ட அறிக்கையை மாநில அரசு தயார் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் இந்த கடிதத்தின் நகல்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், துணை முதல்-மந்திரி அஜித் பவார், மந்திரிகள் பாலசாகேப் தோரட், அசோக் சவான், ஜெயந்த் பாட்டீல் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார்.

Next Story