கொரோனா பாதிப்பு காரணமாக ‘நீட்’ எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடந்தது முடிவு நாளை வெளியாகிறது


கொரோனா பாதிப்பு காரணமாக ‘நீட்’ எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடந்தது முடிவு நாளை வெளியாகிறது
x
தினத்தந்தி 14 Oct 2020 11:12 PM GMT (Updated: 2020-10-15T04:42:49+05:30)

கொரோனா பாதிப்பு காரணமாக ‘நீட்’ தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நேற்று நடந்தது. தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வை எழுத 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், தேர்வை சுமார் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதியதாக கூறப்படுகிறது.

அப்போது கொரோனா பாதிப்பு காரணமாக சில மாணவ-மாணவிகள் தேர்வு எழுத முடியாமல் போனதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கின் போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அதனை ஏற்ற நீதிபதிகள், ‘கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி தேர்வு எழுத முடியாமல் போன கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், கொரோனா நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த மாணவர்களுக்கும் 14-ந் தேதி (நேற்று) தேர்வு’ நடத்த அனுமதித்தனர்.

188 மாணவர்கள்

அதன்படி, நீட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. நாடு முழுவதும் 188 மாணவர்கள் இந்த தேர்வை எழுதியதாக கூறப்பட்டது. தமிழகத்திலும் இந்த தேர்வை மாணவ-மாணவிகள் சிலர் எழுதினார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து இருந்தது.

தேர்வு எழுத வந்திருந்த மாணவ-மாணவிகளும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி திரவம் மூலம் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். தேர்வு அறையில் தேசிய தேர்வு முகமை வழங்கிய முக கவசம் அணிந்தபடி தேர்வை எழுதினார்கள். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்கள் முறையாக தேசிய தேர்வு முகமையிடம் விண்ணப்பித்திருந்தவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத நேற்று அனுமதிக்கப்பட்டது. முறையாக விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகள் தங்களையும் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி தேர்வு மையங்களுக்கு வந்தனர். ஆனால் மறுதேர்வுக்கான அனுமதி இல்லாத நிலையில் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

நாளை முடிவு வெளியீடு

நேற்று நடந்த நீட் மறுதேர்வு சற்று எளிதாகவே இருந்ததாக தேர்வை எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். உயிரியல் பிரிவில் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததாகவும், இயற்பியலை விட வேதியியல் பிரிவில் வினாக்கள் எளிமையாக பதிலளிக்கும் வகையில் இருந்ததாகவும், வழக்கம்போல இயற்பியல் வினாக்கள் சற்று கடினமாகவே இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

கடந்த மாதம் 13-ந் தேதி நடந்த தேர்வு மற்றும் நேற்று நடைபெற்ற மறுதேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிட இருப்பதாக தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story