தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 15 Oct 2020 10:15 AM GMT (Updated: 2020-10-15T15:37:10+05:30)

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி காரைக்குடி பகுதியில் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்குடி,

காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் செட்டிநாடு பகுதி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் காணப்படும் ஆயிரம் ஜன்னல் வீடு, ஆத்தங்குடி மற்றும் கானாடுகாத்தான் பகுதியில் உள்ள அரண்மனை போல் காணப்படும் வீடுகள், ஆத்தங்குடியில் தயாரிக்கப்படும் டைல்ஸ்கள், பாரம்பரியமிக்க முறையில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் செட்டிநாட்டு பட்டுப்புடவை மற்றும் சேலைகள், செட்டிநாட்டு உணவு வகைகள் ஆகியவைகள் இதன் பெருமையை உலகிற்கு பறைசாற்றி வருகிறது. இந்த வகையில் மேலும் ஒரு வைரக்கற்களாக இங்கு தயாரிக்கப்படும் இந்த செட்டிநாட்டு பலகாரங்கள் வகைகளும் பிரசித்தி பெற்றது.

பொதுவாக விழாக்காலம், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக இந்த செட்டிநாட்டு பலகாரங்களுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வந்து சேரும். இதுதவிர ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையின்போதும் இந்த செட்டிநாட்டு பலகாரங்களின் தேவை அதிகரிக்கும். நொறுங்க தின்றால் நூறு வயது என்று அப்போதே நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாடு பலகாரங்களும் அமைந்துள்ளது. அந்த அளவிற்கு இந்த பலகாரங்கள் தயாரிக்கும் முறையும் அடங்கி உள்ளது. இங்கு 5, 7 மற்றும் 9 வரிசை கொண்ட செட்டிநாட்டு தேன்குழல் முறுக்குகள், அதிரசம், மணகோலம், சீடை, தட்டை, கை முறுக்கு, பிரண்டை முறுக்கு, மாவு உருண்டை, காரா பூந்தி, மிக்சர், மைசூர்பாகு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் மட்டும் உள்ளதால் தற்போதே இந்த செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கொத்தமங்கலம், செட்டிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள கோட்டையூரை சேர்ந்த மீனாள்பெரியகருப்பன் ஆச்சி கூறியதாவது:-

தீபாவளி பண்டிகை வர இருப்பதையடுத்து தற்போது இந்த பலகாரங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பலகாரங்கள் தயாரிக்க செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் 3 மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும். இந்தாண்டு முன்கூட்டியே பலகாரங்கள் செய்யும் பணியை தொடங்கி உள்ளதால் ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது. பலகாரங்களை கடந்தாண்டு போலவே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் அவரது உறவினர்கள் வாங்கி அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story