கோவில்பட்டியில் மயானத்திற்கு பாதை கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் மயானத்திற்கு பாதை கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2020 6:35 PM GMT (Updated: 15 Oct 2020 6:35 PM GMT)

தோணுகால் ஊராட்சிக்குட்பட்ட படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மயானத்துக்கு செல்ல பாதை கேட்டு நேற்று கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சிக்கு உட்பட்ட படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மயானத்துக்கு செல்ல பாதை கேட்டு பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, மணி, கிருஷ்ணவேணி, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு கோஷங்கள் முழங்கினர்.

மயானத்துக்கு பாதை இல்லை

பின்னர் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகத்திடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் தோணுகால் ஊராட்சிக்கு உட்பட்ட படர்ந்தபுளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்தவரின் உடலை எடுத்துக்கொண்டு மயானத்துக்கு ஓடையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், ஓடையை கடந்து செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களின் மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள், இறந்தவர்கள் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல பாதை இல்லை. எனவே, தற்போது அமைக்கப்பட்டு வரும் பாலத்தை இடப்புறமாக விரிவுபடுத்த வேண்டும். மயானத்துக்கு தண்ணீர், கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story