மாவட்ட செய்திகள்

திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் 2 துப்பாக்கிகள் திருட்டு போன வழக்கு: போலீஸ்காரர், நண்பருடன் கைது + "||" + At Thiruppanandal police station 2 guns theft case Policeman, arrested with friend

திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் 2 துப்பாக்கிகள் திருட்டு போன வழக்கு: போலீஸ்காரர், நண்பருடன் கைது

திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் 2 துப்பாக்கிகள் திருட்டு போன வழக்கு: போலீஸ்காரர், நண்பருடன் கைது
திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் 2 துப்பாக்கிகள் திருட்டு போன வழக்கில், போலீஸ்காரர் தனது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் துப்பாக்கி புழக்கம் அதிகமாக இருப்பதாக குற்ற தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி கும்பகோணம் அருகே விளந்தகண்டம் கிராமத்தை சேர்ந்த 3 பேரை துப்பாக்கி வைத்து இருந்ததாக குற்ற தடுப்பு நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர்.


அவர்களிடம் இருந்து 5 ஏர்கன் வகைகள் துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், 2 பெல்ட் ரிவால்வர் என 8 துப்பாக்கிகளையும், 67 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் உள்ள ஆயுத பாதுகாப்பு அறையில் போலீசார் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்களை வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி போலீசார் எண்ணி பார்த்தனர். அப்போது 0.22 பேபி ஷாட் ரிவால்வர், பி.பி.பெல்லட் ஏர்கன் என 2 துப்பாக்கிகள் மாயமானது தெரிய வந்தது. போலீஸ் நிலையத்தில் உள்ள ஆயுத பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 2 துப்பாக்கிகள் மாயமானதால் கடும் அதிர்ச்சி அடைந்த போலீசார், துப்பாக்கிகள் மாயமானது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மாயமான துப்பாக்கியை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம், ஏட்டுகள் மோகன், உமாசங்கர், சிவக்குமார், போலீஸ்காரர்கள் அருண், அழகு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், துப்பாக்கியை திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் பணி புரியும் போலீஸ்காரரே திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் பணி புரியும் கடலூர் மாவட்டம் முட்லூரை சேர்ந்த தமிழ்வாணன் மகன் தீபக்(வயது 26) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த அவரது நண்பர் வாசுதேவன்(23) ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் பிடித்தனர். பின்னர் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கைது செய்யப்பட்ட தீபக், துப்பாக்கிகள் மீது அதிக ஆசை கொண்டவர். மார்ச் மாதம், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை அறையில் வைக்கும்போது சக போலீசாருடன் அருகில் இருந்து தீபக் பார்த்துள்ளார்.

இதையடுத்து தீபக், சில நாட்கள் நோட்டமிட்டு இரண்டு துப்பாக்கிகளை திருடிச் சென்றுள்ளார். அந்த துப்பாக்கிகளை தனது நண்பரிடம் கொடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் தீபக்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

சிகிச்சை முடிந்து குணம் அடைந்ததால் அவர் மீண்டும் பணிக்கு வந்தார். அப்போது துப்பாக்கிகள் மாயமானது குறித்து விசாரணை நடப்பதை அறிந்த தீபக் அதிர்ச்சி அடைந்தார். தன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டத்தை அறிந்த அவர், உடனடியாக தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

வீட்டில் வைத்துள்ள துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு திருப்பனந்தாளுக்கு வருமாறு கூறினார். அதன்படி வாசுதேவன், துப்பாக்கிகளுடன் திருப்பனந்தாள் வந்துள்ளார். அந்த துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தின் பின்புறம் வீசி விடும்படி தீபக் கூறியுள்ளார். தீபக் கூறியதைபோன்று வாசுதேவனும் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தின் பின்புறம் வீசிவிட்டு சென்றுள்ளார்.

போலீஸ் நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை வைத்து தீபக்கின் நண்பரான வாசுதேவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், துப்பாக்கிகள் மாயமான பிறகு வாசுதேவனை செல்போனில் தொடர்பு கொண்டு தீபக் அடிக்கடி பேசியது தெரிய வந்தது. இதனால் துப்பாக்கிகளை இவர்கள் தான் திருடியிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து வாசுதேவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் பணியில் இருந்த தீபக்கை, தஞ்சை குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அதில், துப்பாக்கிகள் மீது ஆசைப்பட்டு அவைகளை திருடியதையும், அவைகளை தனது நண்பரிடம் கொடுத்து வைத்திருந்ததையும் தீபக் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தஞ்சை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான தீபக்கின் தந்தை கடலூர் சப்-இன்ஸ்பெக்டர்
போலீஸ் நிலையத்தில், துப்பாக்கிகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தீபக்கின் தந்தை தமிழ்வாணன், கடலூரில் உள்ள முதுநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தன்னைப்போன்று மகனையும் காவல் துறையில் சேர்க்க வேண்டும் என தமிழ்வாணன் ஆசைப்பட்டார். அதன்படி போலீஸ்காரர் தேர்வில் பங்கேற்று கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ்காரராக தீபக் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சென்னை ஆவடியில் பயிற்சி மேற்கொண்டார்.

பயிற்சி முடிந்தவுடன் தஞ்சை ஆயுதப்படை பிரிவில் பணியமர்த்தப்பட்டார். அங்கு சில மாதங்கள் பணி புரிந்து வந்த தீபக், திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார். அங்கு பணி புரிந்த நேரத்தில் துப்பாக்கிகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.