சமூக வலைதளத்தில் குணசேகரன் எம்.எல்.ஏ.பற்றி அவதூறு: தி.மு.க.நிர்வாகி உள்பட 2 பேர் கைது


சமூக வலைதளத்தில் குணசேகரன் எம்.எல்.ஏ.பற்றி அவதூறு: தி.மு.க.நிர்வாகி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2020 3:20 AM GMT (Updated: 17 Oct 2020 3:20 AM GMT)

திருப்பூரில் குணசேகரன் எம்.எல்.ஏ.வை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

திருப்பூர்,

திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் தினேஷ். இவர் கருவம்பாளையம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார். இவர் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

அதில் திருப்பூர் கருவம்பாளையம் வள்ளலார் வீதியில் வசிக்கும் ஜீவா என்கிற அருண் என்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.குணசேகரன் பற்றி தகாத சொற்களைப் பயன்படுத்தியும், மக்களிடையே குழப்பத்தையும், நற்பெயரை கெடுக்கும் விதமாக தொடர்ச்சியாக பதிவுகளை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிடுகிறார். கலெக்டர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள நிழற்குடை பணி இன்னும் முடிவடையாமல் திறப்புவிழா காணாமல் உள்ளது. ஆனால் நிழற்குடை சம்பந்தமாக தவறான பதிவுகளை இட்டு வருகிறார். இந்த பதிவுகளால் குணசேகரன் எம்.எல்.ஏ.வின் பெயருக்கும், தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக பதிவு செய்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின் மீது தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

இதுபோல் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாவட்ட துணை தலைவர் தங்கவேல் என்பவர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த மனுவில் திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் 1-வது வீதியில் கைப்பம்பை மாற்றி மின் மோட்டார் பொருத்தி அங்குள்ள வீதிகளுக்கு தண்ணீர் வசதி செய்து மாநகராட்சி பொது நிதியிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை குணசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் என்று தண்ணீர் தொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குரிய செலவு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. ஆனாலும் சிலர் சமூக வலைதளங்களில் ஒரு தண்ணீர் தொட்டி அமைக்க ரூ. 7 லட்சத்து 70 ஆயிரமா? என்று கேலி செய்யும் விதமாக மீம்ஸ்கள் மூலமாகவும், குணசேகரன் எம்.எல்.ஏ.வை இழிவுபடுத்தும் வகையில் அவரது புகைப்படத்துடன் சேர்த்து தவறான முறையில் சித்தரித்து பதிவு செய்து பரப்பி வருகிறார்கள். மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே அமைக்கப்பட்ட நிழற்குடை பணிகள் குறித்தும் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகிறது. ரூ. 255 கோடிக்கு மேல்நிலைத் தொட்டி கட்டி இருக்கிறார்கள் என்று பொய்யான, அவதூறான, தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

அ.தி.மு.க.வின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அபுபக்கர் சித்திக், ஈஸ்வரானந்தம், இர்சாத் அகமது, சைய்யது அசரத், வி.ஜி.வி. நண்பர்கள் குழுவை சேர்ந்த ஆனந்த், பார்த்திபன், அருணாசலம் உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். எனவே இந்த மீம்ஸ்களை நீங்கவும், சம்பந்தப்பட்டவர்களின் சமூக வலைதள கணக்குகளை முடக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு மீதும் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் தவறாக பதிவிட்டது தொடர்பாக கருவம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான ஜீவா என்ற அருண் (வயது 25) என்பவரையும், மற்றவர்களுக்கு பகிர்வு செய்த நல்லூர் வி.ஜி.வி. கார்டனை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் (54) என்பவரையும் திருப்பூர் தெற்கு போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 6 பேரை தேடி வருகிறார்கள்.

Next Story