சேலம், நாமக்கல், ஓசூரில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத பணம் பறிமுதல்


சேலம், நாமக்கல், ஓசூரில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Oct 2020 11:55 AM IST (Updated: 18 Oct 2020 11:55 AM IST)
t-max-icont-min-icon

சேலம், நாமக்கல், ஓசூரில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். மேலும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்,

தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் முறைகேடாக பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள சில சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.

அதன்படி, சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சேலம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், தங்கமணி, சிவகுமார் மற்றும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருவாய் ஆய்வு குழுவை சேர்ந்தவர்கள் என 15 பேர் கொண்ட குழுவினர் சென்றனர். பின்னர் அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தை உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு தீவிர சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை நேற்று காலை 6 மணி வரை விடிய, விடிய நடந்தது. மொத்தம் 14 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் உத்தரவின்பேரில், நாமக்கல்லில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்க்குமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் விசாரணையின்போது உதவி இயக்குனர் ரமணியிடம் இருந்து கணக்கில் வராத பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் மேற்பார்வையாளர் ஜெயக்குமாரிடம் இருந்து ரூ.10 ஆயிரமும், வரைவாளர்களான புனிதவதியிடம் இருந்து ரூ.30 ஆயிரமும், கிருஷ்ண ஜோதியிடம் இருந்து ரூ.5 ஆயிரமும் கைப்பற்றப்பட்டது. இதுமட்டுமின்றி கணக்கில் வராத மொத்தம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்து 740 கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக உதவி இயக்குனர் ரமணி, மேற்பார்வையாளர் ஜெயக்குமார், அலுவலர்கள் புனிதவதி, கிருஷ்ணஜோதி மற்றும் புரோக்கர்கள், என்ஜினீயர்கள், நீல ஊக்குவிப்பவர்களான நாகராஜ், முத்துசாமி, சுப்பிரமணி, ராதாகிருஷ்ணன், கண்ணன், ஜெயராஜ், சபரிராஜ், ரத்தினவேல், அருண் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் வளாகத்தின் அருகே ஜூஜூவாடியில் போக்குவரத்து சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் தமிழகத்திற்குள் வாகனங்கள் வரும் இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை நேற்று அதிகாலை வரை நீடித்தது. அப்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 120-ஐ மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சோதனைச்சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சுப்புரத்தினம், உதவியாளர் ராமலிங்கம் ஆகிய 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story