காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தம்பி கைது


காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தம்பி கைது
x
தினத்தந்தி 19 Oct 2020 3:13 AM IST (Updated: 19 Oct 2020 3:13 AM IST)
t-max-icont-min-icon

கொப்பல் அருகே, காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவ கொலை செய்த பெண்ணின் தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கொப்பல்,

பாகல்கோட்டை டவுனை சேர்ந்தவர் வினோத். இவர் கொப்பல் மாவட்டம் கரடகி டவுனில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். வினோத்துக்கும், பாகல்கோட்டை டவுனை சேர்ந்த திரிவேணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் திரிவேணியின் வீட்டிற்கு தெரியவந்தது. ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வினோத்தை, திரிவேணி திருமணம் செய்து இருந்தார். இதையடுத்து வினோத் வேலை பார்த்து வரும் வங்கியிலேயே திரிவேணியும் வேலை செய்தார். இதனால் 2 பேரும் கரடகி டவுனில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

கம்பியால் அடித்து கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வினோத்தும், திரிவேணியும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த சிலர் வினோத்தையும், திரிவேணியையும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த திரிவேணி சம்பவ இடத்திலேயே இறந்தார். வினோத் உயிருக்கு போராடினார்.

இதையடுத்து வினோத்தையும், திரிவேணியையும் தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கரடகி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிருக்கு போராடிய வினோத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் திரிவேணியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதால் திரிவேணியையும், வினோத்தையும், திரிவேணியின் தம்பி அவினாஷ் உள்ளிட்ட சிலர் இரும்பு கம்பியால் அடித்ததும், இதில் திரிவேணி உயிரிழந்ததும் தெரிந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வினோத்தும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து கரடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து திரிவேணியின் தம்பியான அவினாசை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். காதல் திருமணம் செய்த தம்பதி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் கரடகியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story