புதுவையில் இருந்து பிற மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்


புதுவையில் இருந்து பிற மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2020 10:37 PM GMT (Updated: 18 Oct 2020 10:37 PM GMT)

புதுவையில் இருந்து பிற மாநிலங்களுக்கு விரைவில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மக்களின் சகஜ வாழ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படிப்படியாக வர தொடங்கியுள்ளனர். தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால், நான் புதுவை மக்களை கேட்டுக்கொள்வது, நீங்கள் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முனைப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.

புதுவையில் தற்போது 95 சதவீதம் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மாநிலத்தில் பஸ் போக்குவரத்து முழுமையாக தொடங்கப் படும். புதுவையில் இருந்து வெளிமாநிலத்திற்கு பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசுடன் பேசி வருகிறோம். கொரோனா தடுப்பில் அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

ரூ.789 கோடி

பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்கிறது. இதனை எதிர்த்து மாநில முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டில் கை வைக்க மத்திய அரசுக்கு உரிமையில்லை.

சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் மாநிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் புதுவை மாநிலத்திற்கு ரூ.798 கோடி வெகுவிரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு உண்டான கோப்பு நாளை(இன்று) மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

உப்பனாறு பாலம்

காரைக்காலில் 16 திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான திறப்பு விழாவை விரைவில் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரூ.12 கோடி செலவில் பல சாலைகள் அமைக்கும் பணி விரைவில் செயல்படுத்தப்படும். புதுச்சேரியில் சாலைகள் அமைக்க மத்திய அரசு ரூ.10,500 கோடி வழங்குகிறது. காமராஜர் மணி மண்டபம், உப்பனாறு பாலம் விரைவில் திறக்கப்படும். மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. மாநில அரசின் வருவாயை வைத்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

ஒரு சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக அரசின் மீது தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்கும் வேலையை பா.ஜ.க. செய்கிறது என்று நான் ஆதாரத்தோடு சொன்னதை பா.ஜ.க.வின் மாநில பொறுப்பாளர் ரவி மறுத்துள்ளார். ஆனால் ஆதாரத்தோடு சொன்னதற்கு பதில் சொல்லவில்லை. படிப்படியாக மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

புறக்கணிப்பார்கள்

புதுவை அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என்பது எங்கள் இலக்கு. ஒருசில சம்பவங்களை வைத்து இங்கு அமைதி இல்லை, நிம்மதி இல்லை என்று சிலர் கூறுகின்றனர். கடந்த காலங்களை ஒப்பிடும் போது புதுவை அமைதியாக உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுலா பயணிகள் வர மறுத்தனர். தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வை மக்கள் கண்டிப்பாக புறக்கணிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களுக்காக பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story