நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள்


நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Oct 2020 4:49 AM IST (Updated: 19 Oct 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

தென்காசி,

தமிழ்நாடு நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம் என்பதால் கிடைக்கும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தவும், குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற நுண்ணீர் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடம் அறிமுகப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும் பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அளித்து வருகிறது.

பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி விவசாயிகள் நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்ள துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இதற்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைக்கவும் நீரினை இறைப்பதற்கு ஆயில் என்ஜின், மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்ல பாசன நீர் குழாய்களை நிறுவவும், தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் போன்ற துணை நிலை நீர் மேலாண்மை பணிகளுக்காகவும், மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்திற்கு குழாய்க்கிணறு மற்றும் துளைக்கிணறு அமைக்க 160 எண்களும் டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்பு செட் அமைக்க 499 எண்களும், நீர்ப்பாசன குழாய் அமைக்க 1,362 எண்களும், நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க 110 எண்களும் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி உதவி

குழாய் கிணறு, துளை கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், டீசல் பம்பு செட், மின் மோட்டார் பம்பு செட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத தொகை ரூ. 15 ஆயிரத்துக்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரினைக் கொண்டு செல்லும் வகையில் நீர் பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீத தொகை ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்த்தேக்க தொட்டி நிறுவுவதற்கு அதற்கு ஆகும் செலவில் 50 சதவீத தொகை ஒரு கன மீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமலும், நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரத்துக்கு மிகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பணிகளுக்கான மானியம் நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுவதற்கு முன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி கூடுதல் தகவல்கள் பெற்று பயன் பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story