மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும்


மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Oct 2020 1:59 AM IST (Updated: 20 Oct 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என்று பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு,

பா.ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட காசிபாளையம் கிழக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டல செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் விவேகானந்தன், துணைத்தலைவர் சங்கமித்திரை, மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் மாநில எஸ்.டி. பிரிவு துணைத்தலைவர் விநாயகமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சமூக இடைவெளி

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை என்கிற பெயரில் கோவில்களில் கூட்டம் கூடுவதை தடுக்கும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளிலும், பஸ்களிலும் சமூக இடைவெளி இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க வேண்டும்.

காளைமாடுசிலை பகுதியில் இருந்து கொல்லம்பாளையம் வரை செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் மின் விளக்குகள் வசதியை செய்து கொடுக்க வேண்டும்.

சாலை சீரமைப்பு

மரப்பாலம் நேதாஜிரோடு, ஜீவானந்தம்ரோடு, ஆலமரத்து தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் பாதாள சாக்கடைகளுக்காக தோண்டப்பட்ட குழியை முறையாக மூடப்படாததால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் விபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே அந்த பகுதியில் குழிகளை முறையாக மூடி சாலையை சீரமைக்க வேண்டும்.

கள்ளுக்கடைமேடு ஈ.வி.ஆர். வீதியில் உள்ள வீடுகளுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் குழாய்களை அமைக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காந்திமதி, பாப்பாத்தி, விவசாய பிரிவு துணைத்தலைவர் சதீஸ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story