தோனி மடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் சமத்துவ மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு


தோனி மடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் சமத்துவ மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 20 Oct 2020 2:10 AM IST (Updated: 20 Oct 2020 2:10 AM IST)
t-max-icont-min-icon

தோனி மடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெறுவதற்கான பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அந்த பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆர்.சின்னச்சாமி, எம்.குருநாதன் மற்றும் கட்சியினர் கொடுத்த கோரிக்கை மனுக்களில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தோனி மடுவு

ஈரோடு மாவட்டம் தோனி மடுவு பள்ளத்தாக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. இந்த இடத்துக்கு அருகே சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றிய பெரியதண்டா வனப்பகுதி அமைந்து உள்ளது. இதன் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் செல்கிறது. அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்படும் முன்பு தோனிமடுவு பகுதியில் அதிகமாக தண்ணீர் தேங்கும். எனவே இந்த இடத்தில் தடுப்பணை கட்டி, இயற்கையாக வரும் தண்ணீரை திருப்பிவிட்டால் பாசன வசதி கிடைக்கும். இதன்மூலமாக கொளத்தூர், அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளம் நிரம்பி தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ள அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. எனவே புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், மேட்டூர்ரோட்டை இருவழி பாதையாக மீண்டும் மாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் அவர்கள் கூறிஇருந்தனர்.

நிவாரணம்

தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யாத அனைத்து முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும், கொரோனா தொற்று கால நிவாரண உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி நிவாரண தொகை பெறுவதற்காக ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் சுமார் 2 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே உதவித்தொகை கிடைத்து உள்ளது. எனவே மீதமுள்ளவர்களுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

Next Story