குளித்தலை அருகே, லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு


குளித்தலை அருகே, லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2020 10:15 PM GMT (Updated: 21 Oct 2020 3:37 AM GMT)

குளித்தலை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலை, 

சேலம் அருகே உள்ள காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 39). லாரி டிரைவரான இவர், கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் லாரியில் இருந்து ஜல்லிக் கற்களை இறக்கிவிட்டு மீண்டும் மயிலாடுதுறையிலிருந்து குளித்தலை வழியாக கரூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள தண்ணீர்ப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே புதிய மோட்டார் சைக்கிள்கள் ஏற்றிக்கொண்டு வந்த கன்டெய்னர் லாரி, இந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் கனகராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இருப்பினும் இவரது லாரி விபத்தில் சேதமடைந்தது.

மோட்டார் சைக்கிள்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி டிரைவர் மைசூர் ஸ்ரீரங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (55) என்பவர் காயமின்றி உயிர்தப்பினர். ஆனால் இந்த லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட 3 புதிய மோட்டார் சைக்கிள்களும் கீழே விழுந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குளித்தலை போலீசார் காயமடைந்த லாரி டிரைவர் கனகராஜை ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பினார். இந்த விபத்து காரணமாக திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story