இருவரும் வெவ்வேறு கிரிக்கெட் அணியில் ஆடியதால் அடிக்கடி தகராறு: உடன் பிறந்த தம்பி மீது அம்மிக்கல்லை போட்டுக்கொன்ற என்ஜினீயர் - திருமங்கலம் அருகே பரபரப்பு
உடன் பிறந்த தம்பி தலை மீது அம்மிக்கல்லை போட்டுக்கொன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். இருவரும் வெவ்வேறு கிரிக்கெட் அணியில் ஆடியதால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு இந்த கொலையில் முடிந்த விபரீதம் நேர்ந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குளம் பகுதியை சேர்ந்தவர் மருதன். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். மருதனின் 2-வது மனைவி பிச்சையம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள். முதல் மகன் பாண்டியராஜன்(வயது 28). என்ஜினீயர். இவரது தம்பிகள் சின்னத்துரை, தினேஷ்(23).
தினேஷ் மதுரையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். தினேஷ் கிரிக்கெட் நன்றாக விளையாடுவார். இவருக்கு எதிர் அணியில் அண்ணன் பாண்டியராஜன் விளையாடி வந்திருக்கிறார். இந்த வகையில் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. பெற்றோர் சமரசம் செய்தும் அவர்களுக்குள் இருந்த பிரச்சினை தீரவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ் வெளியே சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்தார். பின்னர் சாப்பிட்டுவிட்டு மாடியில் உள்ள அறையில் படுக்க சென்றுள்ளார். ஆனால் காலையில் நீண்ட நேரமாகியும் தினேஷ் அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனையடுத்து பெற்றோர், தினேஷ் அறைக்கு சென்று கதவை திறந்து உள்ளே பார்த்தனர். அப்போது தினேஷ் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.
உடனடியாக பெற்றோரும், உறவினர்களும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தினேசை கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, தினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து திருமங்கலம் போலீசார் விரைந்து வந்து தினேஷ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தினேஷ் பிணமாக கிடந்த இடத்தில் ரத்தக்கறையுடன் அம்மிக்கல் கிடந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த கொலை தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தீவிர விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் தினேசின் அண்ணன் பாண்டியராஜனை காணவில்லை. இதனால் இந்த கொலையை அவர் செய்திருக்கலாம் என போலீசார் கருதி, அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாயமான பாண்டியராஜனை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது தம்பியின் தலை மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story