விரைவில் அனைவருக்கும் மின்சார ரெயிலில் அனுமதி மந்திரி விஜய் வடேடிவார் தகவல்


விரைவில் அனைவருக்கும் மின்சார ரெயிலில் அனுமதி மந்திரி விஜய் வடேடிவார் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2020 9:38 PM GMT (Updated: 21 Oct 2020 9:38 PM GMT)

மும்பையில் விரைவில் அனைவரும் மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என மந்திரி விஜய் வடேடிவார் கூறினார்.

மும்பை,

மும்பை போக்குவரத்தின் உயிர்நாடியாக விளங்குவது மின்சார ரெயில் போக்குவரத்து ஆகும். மும்பை நகர், புறநகர் இடையேயான போக்குவரத்தின் இணைப்பு பாலமாக திகழும் மின்சார ரெயில் போக்குவரத்து ஊரடங்கின் காரணமாக முடங்கியது.

பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டபோதும் டாக்டர்கள், நர்சுகள் ஆஸ்பத்திரி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் போன்ற அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மின்சார ரெயில்களில் பெண் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆலோசனை

இந்தநிலையில் பேரிடர் மற்றும் நிவாரணத்துறை மந்திரி விஜய் வடேடிவார் நேற்று ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மும்பை மக்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்ய நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. விரைவில் அனைவரும் மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதுகுறித்த முடிவு அடுத்த 2 அல்லது 3 நாட்களில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. நாங்கள் அனைத்து அமைப்புகளையும் நம்பிக்கையுடன் வழிநடத்த நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு மின்சார ரெயில் சேவையை பெரிதும் நம்பியுள்ள மும்பை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story