கொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டும் சித்தராமையா பேட்டி


கொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டும் சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2020 3:37 AM IST (Updated: 22 Oct 2020 3:37 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை பிரதமர் மோடியே ஏற்க வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.

உப்பள்ளி,

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் குறைந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்றாலும், அதற்கான முழு பொறுப்பை கொரோனா மீது போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யும் பிரதமர் மோடியின் செயல் அதை விட அதிர்ச்சி தரக்கூடியது ஆகும். பிரதமராக மோடி வந்த பிறகு நாட்டின் பொருளாதாரத்திற்கு நோய் பிடித்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்வதாக பல்வேறு பொருளாதார நிபுணர்கள் மத்திய அரசை எச்சரித்தனர்.

அப்போது இதை மத்திய அரசு அலட்சியப்படுத்தியது. கொரோனாவுக்கு முன்பு நாட்டின் வளர்ச்சியை கணக்கிடும் புள்ளி விவரங்களை மாற்றினர். இதனால் அதிகாரப்பூர்வமாக வளர்ச்சி குறித்த சரியான புள்ளி விவரங்கள் வெளியிடவில்லை. கொரோனாவை தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய மத்திய அரசு, கை தட்டுங்கள், மணி அடியுங்கள் என்று கூறியது. இது மத்திய அரசின் அலட்சிய போக்கை எடுத்துக் காட்டுகிறது.

பணமதிப்பிழப்பு

கொரோனாவை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கை காங்கிரஸ் ஆதரித்தது. ஆனால் மத்திய அரசு தினசரி ஏதாவது ஒரு முடிவை எதிர்பாராமல் எடுத்து வந்ததால் நன்மையை விட பாதிப்புகளே அதிகம் ஏற்பட்டது. கொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை பிரதமரே ஏற்க வேண்டும். நாட்டின் இன்றைய மோசமான நிலைக்கு பணமதிப்பிழப்பு, குறைகளுடன் செயல்படுத்திய சரக்கு-சேவை வரி திட்டம், பணியாற்றவே தெரியாத மந்திரிகள் போன்றவை தான் முக்கிய காரணம். நோய்க்கு காரணம் தெரியாமல் மருந்து கொடுத்தால் அந்த நோய் தீராது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story