பாளையங்கோட்டையில் கோவில் நிலத்தை மீட்கக்கோரி அறநிலையத்துறை அதிகாரி அலுவலகத்தை இந்து அமைப்புகள் முற்றுகை


பாளையங்கோட்டையில் கோவில் நிலத்தை மீட்கக்கோரி அறநிலையத்துறை அதிகாரி அலுவலகத்தை இந்து அமைப்புகள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Oct 2020 11:46 PM GMT (Updated: 21 Oct 2020 11:46 PM GMT)

பாளையங்கோட்டையில் கோவில் நிலத்தை மீட்கக்கோரி இந்து அறநிலையத்துறை அதிகாரி அலுவலகத்தை இந்து அமைப்பினர் நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் உள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தை இந்து அமைப்புகள் சார்பில் நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் குழைக்காதர் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் குற்றாலநாதர் வரவேற்று பேசினார்.

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அனுமதிக்க மாட்டோம்

போராட்டத்தின்போது இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் பேசியதாவது:-

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் ஏராளமானவர்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலத்திற்கு பட்டா கேட்டு அரசியல்வாதிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கோவில் நிலங்கள் புறம்போக்கு சொத்து அல்ல. இதை பட்டா போட்டுக் கொடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

அந்த காலத்தில் கோவில்களில் ஆறு கால பூஜை நடத்த வேண்டும் என்று கோவில்களுக்கு நிலங்கள் எழுதி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது கோவில் நிலங்களை பட்டா போட்டு கேட்கிறார்கள். திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வழி இல்லை. ஆனால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து குடியேறி உள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோரிக்கை மனு

தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனுக்கள், இந்து அறநிலைய துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சுடலை, சிவா, செல்வராஜ், விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஆறுமுக கனி, மாவட்ட தலைவர் முத்துகுமார், ஆலய பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த குணசீலன், ராஜகோபால், பாரதிய மஸ்தூர் சங்கத்தை சேர்ந்த செந்தில் பாண்டி, கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story