ஊழியர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி: கூடலூரில் 2 வங்கிகள் மூடல்


ஊழியர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி: கூடலூரில் 2 வங்கிகள் மூடல்
x
தினத்தந்தி 22 Oct 2020 4:45 AM GMT (Updated: 22 Oct 2020 5:30 AM GMT)

கூடலூரில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக 2 வங்கிகள் மூடப்பட்டது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று சிண்டிகேட் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மேற்கண்ட 2 வங்கிகளுக்கும் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் வங்கிகள் மூடப்பட்டது. மேலும் கொரோனா தொற்று எதிரொலியாக மூடப்பட்டு உள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதேபோன்று ஏ.டி.எம். மையங்கள் உடனடியாக அடைக்கப்பட்டது. பின்னர் வாடிக்கையாளர்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் கொண்டு மூடப்பட்டது.

இதனிடையே அந்த வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் வங்கிகளும், அதன் ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டு இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் அவர்கள் திரும்பி சென்றனர். இதேபோன்று கூடலூர் அருகே மேபீல்டு கிராமத்தில் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்தனர். மேலும் பிற பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பினர். இதன் முடிவு தெரியும் வரை வீடுகளை விட்டு அவர்கள் வெளியே வர தடை விதித்தனர்.

Next Story