பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைவு


பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைவு
x
தினத்தந்தி 22 Oct 2020 9:00 PM GMT (Updated: 22 Oct 2020 9:00 PM GMT)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

பவானிசாகர், 

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது.

இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.

நீர்மட்டம் 98.64 அடி

அதேசமயம் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கும், கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசனத்துக்கும் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதாலும் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

கடந்த 20-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் வந்தது. இது நேற்று முன்தினம் வினாடிக்கு 521 கனஅடி தண்ணீராக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 98.90 அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி நிலவரப்படி அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 477 கனஅடியாக குறைந்தது.

இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து 98.64 அடியாக ஆனது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்கால் மூலம் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Next Story