பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2020 10:34 PM GMT (Updated: 22 Oct 2020 10:34 PM GMT)

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் ஆவார்.

பெங்களூரு, 

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வன்முறை வெடித்திருந்தது. இந்த வன்முறையின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அகண்ட சீனிவாசமூர்த்தி, அவரது உறவினர் வீடு, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு மர்மநபர்களால் தீவைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைக்கு எம்.எல்.ஏ.வான அகண்ட சீனிவாசமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜ் இடையே உள்ள அரசியல் பிரச்சினை காரணம் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் வன்முறையில் கைதான பலருக்கு, பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பதால், அதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில், டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டி.ஜே.ஹள்ளியை சேர்ந்த சையத் சேட் (வயது 34) என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். இவர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முக்கிய பிரமுகரான முஜாமில் பாஷாவின் நெருங்கிய ஆதரவாளர் ஆவார். வன்முறை நடந்த தினத்தில் முஜாமில் பாஷாவுடன் சேர்ந்து டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் முன்பாக சையத் சேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். மேலும் முஜாமில் பாஷா கூறியபடி டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் மீது சையத் சேட் தாக்குதல் நடத்தி இருந்ததும் தெரியவந்துள்ளது.

அத்துடன் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு தீவைத்ததில் சையத் சேட்டும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சையத் சேட் ஈடுபட்டதற்கான வீடியோ காட்சிகள் ஏற்கனவே அதிகாரிகளுக்கு கிடைத்திருந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சையத் சேட் யாருடன் எல்லாம் பேசி வருகிறார் என்பதை கண்காணித்து, அவரது செல்போன் சிக்னல் மூலமாக அதிகாரிகள் கைது செய்திருந்தனர். கைதான சையத் சேட்டுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story