நெல்லை மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு


நெல்லை மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 23 Oct 2020 5:16 AM IST (Updated: 23 Oct 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரிஷ்வர் பிரதாப் ஷாஹி நேற்று ஆய்வு செய்தார்.

நெல்லை, 

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரிஷ்வர் பிரதாப் ஷாஹி, பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட கோர்ட்டுக்கு நேற்று காலை வந்தார். அவரை நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது, குற்றவியல் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் தலைமை நீதிபதி அம்ரிஷ்வர் பிரதாப் ஷாஹி, ஒவ்வொரு கோர்ட்டுக்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? கோர்ட்டு வளாகங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வக்கீல்கள் முககவசம் அணிந்து வாதாடுகிறார்களா? சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? எனவும் அவர் பார்வையிட்டார்.

மரக்கன்று நட்டார்

மேலும் அவர், அரசு விதிப்படி ஒரு நாளைக்கு எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது என்பதை முதன்மை நீதிபதி நசீர் அகமதிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரிஷ்வர் பிரதாப் ஷாஹி மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள காலி இடத்தை பார்வையிட்டு, அங்கு சார்பு நீதிமன்றங்கள் எங்கு கட்டலாம்? என்பதையும் ஆய்வு செய்தார். அப்போது நீதிபதிகள் விஜயகாந்த், ரவிசங்கர், இந்திராணி, சிவில் அரசு வக்கீல் அபுதாஹீர், நெல்லை வக்கீல் சங்க தலைவர் சிவ சூரியநாராயணன், செயலாளர் செந்தில்குமார், நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட குற்றவியல் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து கூறியபோது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அம்ரிஷ்வர் பிரதாப் ஷாஹி பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக நெல்லை மாவட்ட கோர்ட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சேரன்மாதேவி, அம்பை கோர்ட்டுக்கு சென்று பார்வையிடுகிறார். சார்பு நீதிமன்றங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்களை அவர் பார்வையிடுகிறார். மேலும் கோர்ட்டு வளாகத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்ட முடியுமா? எனவும் ஆய்வு செய்கிறார்.

நாளை (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சப்-கோர்ட்டுகளையும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வள்ளியூர், நாங்குநேரி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் உள்ள கோர்ட்டுகளையும் ஆய்வு செய்கிறார். வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டை ஆய்வு செய்த பின்னர் அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்பையில்...

இதைத்தொடர்ந்து, அம்பையில் சுமார் ரூ.7½ கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தை தலைமை நீதிபதி அம்ரிஷ்வர் பிரதாப் ஷாஹி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், இன்னும் 10 நாளில் புதிய கோர்ட்டை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அந்த கோர்ட்டு வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தை உடனடியாக அகற்றவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நெல்லை மாவட்ட தலைமை நீதிபதி நசீர் அகமது, மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் (பொறுப்பு) பத்மா, தென்காசி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், அம்பை சார்பு நீதிபதி கவிதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி இளையராஜா, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், அம்பை தாசில்தார் வெங்கட்ராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், வக்கீல் சங்க தலைவர்கள் கந்தசாமி, செல்வஅந்தோணி, ராஜேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கோர்ட்டு அலுவலர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் வரவேற்றார்

முன்னதாக, நெல்லைக்கு வந்த தலைமை நீதிபதி அம்ரிஷ்வர் பிரதாப் ஷாஹியை மாவட்ட கலெக்டர் ஷில்பா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் உடன் இருந்தார். 

Next Story