கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 33 நாட்களில் 2 டி.எம்.சி. தண்ணீர் வந்தது


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 33 நாட்களில் 2 டி.எம்.சி. தண்ணீர் வந்தது
x
தினத்தந்தி 24 Oct 2020 4:00 AM IST (Updated: 24 Oct 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 33 நாட்களில் 2 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது.

செங்குன்றம், 

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அங்கிருந்து பூண்டிக்கு வினாடிக்கு 1,000 கன அடியாக திறந்து விட்டு பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். கடந்த மாதம் 21-ந்தேதி ஏரியின் நீர் மட்டம் 17 அடியாக பதிவாகி வெறும் 107 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருப்பு இருந்தது. நேற்று நீர் மட்டம் 27.95 அடியாக உயர்ந்தது.

ஏரியில் 1.310 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த மாதம் 21-ந்தேதி முதல் நேற்று வரை 33 நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2.014 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 485 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். நேற்று மாலை நிலவரப்படி 57 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஜூலை முதல் அக்டோடர் வரை பூண்டி ஏரிக்கு 8 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். தற்போது கண்டலேறு அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் 8 டி.எம்.சி. தண்ணீரை வரும் மார்ச் மாதத்திற்குள் வழங்கிட முடிவு செய்திருப்பதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story