ரோட்டிலேயே அடுக்கடுக்காக நிறுத்தப்படும் வாகனங்கள் புதிய பஸ் நிலைய பகுதியில் விபத்து அபாயம்
புதுவை புதிய பஸ் நிலைய பகுதியில் அடுக்கடுக்காக பஸ்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் எழுந்துள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கியுள்ளன. அதேபோல் ஆட்டோ, டெம்போக்களும் முழு வீச்சில் இயங்கி வருகின்றன.
ஆனால் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படுவதால் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை. இதனால் பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் போதிய இடமின்றி ரோட்டிலேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்தில் சிக்கல் ஏற்படுவதுடன் பயணிகளும், பொதுமக்களும் அங்கு வருவதால் அந்த பகுதியே இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.
சரக்கு வாகனங்கள்
இதுதவிர அடிக்கடி அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் நடந்து வருகின்றன. இதுதவிர காய்கறி ஏற்றி வரும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களும் அங்கு நிறுத்தப்படுவதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இந்தநிலையில் விரைவில் தமிழக அரசு பஸ்களும் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி செல்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அந்த பஸ்களும் வந்தால் சொல்லவே முடியாத அளவுக்கு நிலைமை போய் விடும்.
இதைத்தவிர்க்க விரைவாக காய்கறி கடைகளை பெரிய மார்க்கெட்டிற்கு மாற்றி புதிய பஸ் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story