காரைக்காலில் மத்திய அரசின் திட்டங்கள் அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் ஆலோசனை


காரைக்காலில் மத்திய அரசின் திட்டங்கள் அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் ஆலோசனை
x
தினத்தந்தி 23 Oct 2020 10:36 PM GMT (Updated: 23 Oct 2020 10:36 PM GMT)

காரைக்காலில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர்.

காரைக்கால், 

காரைக்காலில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் காமராஜர் நிர்வாக வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, எம்.எல்.ஏ.க்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் காரைக்காலில் உள்ள அங்கன்வாடி மையங்கள் எவ்வாறு செயல்படுகிறது? எல்லா குழந்தைகளும் அங்கன்வாடிக்கு வருகிறார்களா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கழிவறை வசதிகள்

அப்போது எம்.பி.க்கள் கூறுகையில், ‘அங்கன்வாடிக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் சத்தான உணவு வழங்கவேண்டும். கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பாக, வட்டார வளர்ச்சி துறை மூலம் அனைத்து அங்கன்வாடிகளிலும் கழிவறை வசதிகளை அமைக்க வேண்டும்’ என்றனர்.

மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா பேசும்போது, ‘காரைக்காலில் மொத்தமுள்ள 172 அங்கன்வாடிகளில் 55 அங்கன்வாடிகள் கழிவறை வசதி இல்லாமல் உள்ளன. இதனை கட்டுவதற்கு புதுச்சேரி அரசிடம் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மனநலம் குன்றியவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றார்.

Next Story