வலங்கைமான் அருகே, ஆற்றில் மூழ்கி மாணவர் சாவு - போலீசார் விசாரணை


வலங்கைமான் அருகே, ஆற்றில் மூழ்கி மாணவர் சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Oct 2020 10:15 PM GMT (Updated: 23 Oct 2020 11:12 PM GMT)

வலங்கைமான் அருகே ஆற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலங்கைமான்,

வலங்கைமானை அடுத்த உத்தாணி நடுத்தெருவை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் யுவராஜ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு வீட்டுக்கு அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஆற்றில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக யுவராஜை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து பாபநாசம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடினர். பின்னர் யுவராஜ் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story