கொரோனா தாக்கம் குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை


கொரோனா தாக்கம் குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2020 5:23 AM IST (Updated: 24 Oct 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி, 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் தற்போது நாடு முழுவதும் குறைந்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் இதன் வீரியம் மிகவும் குறைந்துள்ளது.

பல்வேறு தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டு, தற்போது இரவு 10 மணி வரை கடைகளை திறக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் இங்குள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அனுமதிக்க வேண்டும்

குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து இங்குள்ள அருவிகளில் குளித்து செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு சீசன் காலங்களில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டினாலும், கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அரசு அனுமதித்து உள்ளது. அதுபோல் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். தற்போது சீசன் இல்லாததாலும், குறைந்த அளவில் தண்ணீர் விழுவதாலும் குற்றாலத்திற்கு குறைவான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் சமூக இடைவெளியில் அவர்களை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story