நெல்லித்தோப்பு கல்லறை தோட்டத்தில் முதல்-அமைச்சரை கிறிஸ்தவர்கள் முற்றுகை
புதுச்சேரி நெல்லித்தோப்பு கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் காரா மணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளி அருகில் உள்ளது. இந்த கல்லறை தோட்டம் 2 பகுதியாக உள்ளது. இதில் ஒரு பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அடிப்படை வசதிகள் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ரூ.24லட்சத்து 23 ஆயிரம் செலவில் சிமெண்டு சாலை நடைபாதை, கழிவறை, குடிநீர் தொட்டி, மின் விளக்குகள் உள்ளிட்ட பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தன.
இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று அர்ப்பணித்தார். இதற்கான நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., பங்குத்தந்தை வின்சென்ட், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
முற்றுகை
இந்தநிலையில் சுடுகாட்டில் ஒரு பகுதியை மட்டும் புனரமைத்து விட்டு மற்றொரு பகுதியை புறக்கணித்து விட்டதாக நெல்லித்தோப்பு பங்கு மக்கள் ஒருங்கிணைப்பு குழு, புதுச்சேரி கிறிஸ்தவ பாதுகாப்பு இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். கிறிஸ்தவர்களிடையே பிரிவினையை தூண்டுவதாக அந்த பகுதியில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. கருப்புக் கொடிகளும் கட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
திறப்பு விழா முடிந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஜான்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சுடுகாட்டின் மற்றொரு பகுதியில் நடைபெற வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அங்கு இருந்தவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.
இதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நாராயணசாமி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பகுதியில் புனரமைப்பு பணிகள் தொடங்க ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று உறுதியளித்தார். இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story