ஈரோட்டில் திருமாவளவன் உருவ பொம்மையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல்
ஈரோட்டில் திருமாவளவன் உருவ பொம்மையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு,
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் மோகனபிரியா, மாவட்ட தலைவி புனிதம், எஸ்.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இந்து பெண்களை கொச்சைபடுத்தி இழிவாக பேசியதாகவும், மனுதர்ம சனாதன நூல் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், திருமாவளவனை கைது செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
உருவ பொம்மை எரிப்பு
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார், பா.ஜ.க.வினரை கைது செய்ய முயன்றனர். அனுமதி வாங்கித்தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம் எனக்கூறி பா.ஜ.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர், திருமாவளவனின் உருவபொம்மையை எரித்தார். இதைப்பார்த்த போலீசார் உடனே உருவ பொம்மையில் பற்றி எரிந்த தீயை அணைத்து அப்புறப்படுத்தினார்கள்.
சாலைமறியல்
இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஈ.வி.என். ரோட்டுக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து போகும்படி கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஈ.வி.என். ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story