நாமக்கல், பரமத்தியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 31 பேர் கைது


நாமக்கல், பரமத்தியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 31 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2020 1:35 AM GMT (Updated: 26 Oct 2020 1:35 AM GMT)

பெண்களை அடிமைப்படுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பரமத்திவேலூர், 

பெண்களை அடிமைப்படுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் கபிலன், மாவட்ட பொருளாளர் அரசன், சேந்தமங்கலம் தொகுதி செயலாளர் பணரோஜா, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் ஜூலி மாரியம்மா, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வக்கீல் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக நாமக்கல் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 18 பேரை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.

இதேபோல் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். பரமத்தி ஒன்றிய செயலாளர் கிள்ளிவளவன் வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், திருச்செங்கோடு தொகுதி செயலாளர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மனு தர்மம் என்னும் ஒரு நூலை தடை செய்யக்கோரி கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 13 பேரை பரமத்தி போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story