ராசிபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்


ராசிபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2020 11:40 PM GMT (Updated: 26 Oct 2020 11:40 PM GMT)

ராசிபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

ராசிபுரம், 

ராசிபுரம் நகராட்சி பொதுமக்களுக்கு ராசிபுரம்- எடப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாதா கோவில் தெரு, விநாயகம் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் வழங்காததை கண்டித்து நேற்று காலிக்குடங்களுடன் புதிய பஸ் நிலையம் அருகே திடீரென போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசாரின் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story