விஜயாப்புரா அருகே குடும்பத்தினர் கண்முன் ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை காதல் தோல்வியா?- போலீசார் விசாரணை


விஜயாப்புரா அருகே குடும்பத்தினர் கண்முன் ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை காதல் தோல்வியா?- போலீசார் விசாரணை
x

விஜயாப்புரா அருகே, குடும்பத்தினர் கண்முன்பே ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது. அவர் காதல் தோல்வியில் தற்கொலை முடிவை எடுத்தாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விஜயாப்புரா,

தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 20). இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் கலபுரகி மாவட்டம் கங்காபூரில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். விஜயாப்புரா மாவட்டம் அலமேலா தாலுகா தேவனாங்கோன் பகுதியில் கார் சென்றது. அப்போது அந்த வழியாக ஓடும் பீமா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் ஆற்றுப்பாலத்தில் காரை நிறுத்திவிட்டு ஐஸ்வர்யாவும், அவரது குடும்பத்தினர் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஐஸ்வர்யா திடீரென்று ஆற்றில் குதித்தார். இதில் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அலமேலா போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஐஸ்வர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் குதித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஐஸ்வர்யா பிணமாக கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த காட்சி அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்தது. பின்னர் ஐஸ்வர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.

காதல் தோல்வியால் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து அலமேலா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். குடும்பத்தினர் கண்முன்னே ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விஜயாப்புராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story