பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 40 மூடை மஞ்சள், படகுடன் பறிமுதல்


பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 40 மூடை மஞ்சள், படகுடன் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Oct 2020 1:27 AM GMT (Updated: 27 Oct 2020 1:27 AM GMT)

பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 40 மூடை மஞ்சள் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு சில பொருட்கள் கடத்த உள்ளதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதை தொடர்ந்து மண்டபம் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு ஒரு நாட்டு படகில் ஏறி சோதனை செய்தனர். படகில் மீன்வலைகளுக்கு அடியில் ஏராளமான மூடைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த மூடைகளை பிரித்து பார்த்தபோது, அவற்றில் மஞ்சள் இருப்பது தெரியவந்தது.

40 மூடை மஞ்சள்

இதையடுத்து படகை பறிமுதல் செய்த கடலோர போலீசார் படகில் 40 மூடைகளில் இருந்த மஞ்சளை கைப்பற்றினர். இந்த மஞ்சள் மூடைகளை கடலுக்குள் கொண்டு சென்று சர்வதேச கடல் பகுதியில் வைத்து இலங்கையில் இருந்து வரும் கடத்தல்காரர்களிடம் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக தங்க கட்டிகளை பெற்று வருவதற்கு திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாம்பன் அக்காள்மடம் பகுதியை சேர்ந்த ஸ்மைலன் (வயது29) என்பவரை கடலோர போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பனில் கைப்பற்றப்பட்ட மஞ்சளின் சர்வதேச மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Next Story