கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள் வரத்து குறைவால் விலை உயர்வு


கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள் வரத்து குறைவால் விலை உயர்வு
x
தினத்தந்தி 27 Oct 2020 2:59 AM GMT (Updated: 27 Oct 2020 2:59 AM GMT)

கடலூர் துறைமுகத்தில் வரத்து குறைவால் மீன் விலை உயர்ந்தது. இருப்பினும் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில் ஆயுத பூஜையையொட்டி நேற்று முன்தினம் பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க செல்லவில்லை.

நேற்று ஒரு சில விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தனர். இதனால் மீன் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் வழக்கத்தை விட மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் துறைமுகத்தில் குவிந்தனர். இதன் காரணமாக மீன் விலை உயர்ந்தது. இருப்பினும் பொதுமக்கள் வேறுவழியின்றி போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.

விலை உயர்வு

இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், மீன்களின் வரத்து குறைவால், ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற பெரிய சங்கரா மீன்கள் தற்போது 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சிறிய வகை சங்கரா மீன்கள் வழக்கமாக 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய்க்கு விலை போகும். ஆனால் நேற்று வரத்து குறைவால் 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ வஞ்சரம் மீன்கள் ரூ.350-க்கு விற்றது. ஆனால் நேற்று இதன் விலை ரூ.600 ஆகும். ரூ.100 முதரர் 120 ரூபாய்க்கு விலை போகும் கனவாய் நேற்று ரூ.150-ல் இருந்து ரூ.200 வரை விலை போனது. ரூ.300-க்கு விற்ற இறால் ரூ.500-க்கு விலை போனது என்றார். இருப்பினும் பொதுமக்கள் மீன் வாங்க ஒரே நேரத்தில் கடலூர் துறைமுகத்தில் குவிந்ததால் துறைமுக பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story