மும்பையில் பணியாற்றிய போக்குவரத்து கழக ஊழியர்கள் 105 பேருக்கு கொரோனா
மும்பையில் பணியாற்றிய சாங்கிலி மண்டலத்தை சேர்ந்த 105 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் பொதுமக்களுக்கு மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாததால், பெஸ்ட் நிர்வாகம் அதிகளவில் பஸ் சேவைகளை இயக்கி வருகிறது. அதற்காக மாநில சாலை போக்குவரத்து கழக பஸ்களையும் வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. அந்த பஸ்களில் போக்குவரத்து கழக ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சாங்கிலி மண்டலத்தில் இருந்து 100 அரசு பஸ்களை பெஸ்ட் நிர்வாகம் வாடகைக்கு எடுத்து உள்ளது.
இந்த பஸ்களில் 400 போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 10-ந் தேதி முதல் மும்பையில் பணியாற்றி வருகின்றனர்.
105 பேருக்கு கொரோனா
இந்தநிலையில் 400 பேரில் 105 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் சாங்கிலியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் மும்பையில் பணிக்கு வந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தங்கும் வசதி, உணவு போன்ற தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என டிரைவர், கண்டக்டர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Related Tags :
Next Story