சீனிவாச சாகரா தடுப்பணையில் சமூக இடைவெளியை மறந்து ஆனந்த குளியல் போட்ட மக்கள் போலீசார் தடியடி-பரபரப்பு


சீனிவாச சாகரா தடுப்பணையில் சமூக இடைவெளியை மறந்து ஆனந்த குளியல் போட்ட மக்கள் போலீசார் தடியடி-பரபரப்பு
x
தினத்தந்தி 28 Oct 2020 7:58 AM IST (Updated: 28 Oct 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூர் அருகே சீனிவாச சாகரா தடுப்பணையில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் ஆனந்த குளியல் போட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்ததால் பரபரப்பு உண்டானது.

சிக்பள்ளாப்பூர், 

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றிதிரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேவையின்றி சுற்றியவர்கள் மீது வழக்கும்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதியும் வழங்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

ஆனந்த குளியல்

இந்த நிலையில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளும் நிரம்பி உள்ளன. அங்கேயும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் தாலுகாவில் கடந்த சில தினங்களாக கொட்டி தீர்த்த கனமழையால் சீனிவாச சாகரா என்ற தடுப்பணை வேகமாக நிரம்பியது.

அந்த தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறி அருவி போல கொட்டியது. இதுபற்றி அறிந்ததும் சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று தடுப்பணையில் குவிந்தனர். தடுப்பணையில் இருந்து அருவி போல கொட்டிய தண்ணீரில் சமூக இடைவெளியை மறந்து ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் குளியல் போட்டனர். இதுபற்றி இளம்பெண்கள் கூறும்போது, கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே பொழுதை கழித்தோம். இதனால் எங்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது. தற்போது அதை மறக்கும் வகையில் உற்சாகமாக ஆனந்த குளியல் போடுகிறோம் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். மேலும் தடுப்பணை அருகே நின்று இளம்பெண்கள் செல்பியும் எடுத்து கொண்டனர்.

போலீசார் தடியடி

இந்த நிலையில் சமூக இடைவெளியை மறந்து தடுப்பணையில் மக்கள் குவிந்தது பற்றி அறிந்த சிக்பள்ளாப்பூர் போலீசார் அங்கு சென்று, குளித்து கொண்டு இருந்தவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அதை ஏற்க மக்கள் மறுத்து விட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

இதற்கிடையே சமூக இடைவெளியை மறந்து மக்கள் குளியல் போடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 

Next Story