டிசம்பர் முதல் அமல்: அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்


டிசம்பர் முதல் அமல்: அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2020 3:36 AM GMT (Updated: 28 Oct 2020 3:36 AM GMT)

புதுவையில் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் வருகிற டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் 3 லட்சத்து 45 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசு ஊழியர்கள். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் கண்டறியப்பட்டு அவர்கள் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின்கீழ் வருகின்றனர்.

இதற்கான பிரீமிய தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் செலுத்த வேண்டும். புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பதாரர்களுக்கும் இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தோம்.

2.17 லட்சம் குடும்பம்

ஆனால் மத்திய அரசு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்களுக்கான காப்பீடு பிரீமிய தொகையை செலுத்துவதாக ஏற்றுக்கொண்டுள்ளது. புதுவையில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச காப்பீடு திட்டத்தை தொடங்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினார்கள்.

அதை ஏற்று மீதமுள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் குடும்பத்தினருக்கும் இலவச காப்பீடு திட்டம் புதுவை அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முழு பிரீமிய தொகையை புதுவை அரசே செலுத்த உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. 21 நாட்களில் டெண்டரை இறுதி செய்வோம்.

டிசம்பர் முதல் அமல்

அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இலவச காப்பீடு திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இந்த திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் வரை தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story