நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி- பா.ஜனதாவினர் போராட்டம்
நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். இதுதொடர்பாக பேசிய தொல்.திருமாவளவன் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும். ஈரோட்டில் அவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை சந்திப்பு அண்ணா சிலை முன்பு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 பேர் கைது
இந்த போராட்டத்திற்கு செய்தி தொடர்பாளர் முத்து வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.சி. கார்த்திக், சேகர், ரவிசங்கர், வேலாயுதம், தமிழ்ச்செல்வன், மக்கள் அதிகாரம் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர்.
பா.ஜனதா போராட்டம்
பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. நெல்லையில் மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமையில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது தொல். திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் வைரமுத்து, மகளிர் அணி மாவட்ட தலைவி செல்வக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கணேசமூர்த்தி, முத்துக்குமார், மாவட்ட செயலாளர் முத்து பலவேசம், வக்கீல் அணி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story