தூத்துக்குடியில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்


தூத்துக்குடியில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2020 6:10 AM GMT (Updated: 28 Oct 2020 6:10 AM GMT)

தூத்துக்குடியில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் உள்ள அலுவலர்களை கூடுதல் கலெக்டர் திடீரென இடமாற்றம் செய்து உள்ளார்.

இதனால் வருவாய்த்துறை பணியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று அவர்கள் பணியை புறக்கணித்து, அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்கள் உதவி கலெக்டர் அலுவலகங்களில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய்த்துறை பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

தர்ணா

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தூர்ராஜன் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை செயலாளர் வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story