நிதி நிறுவன மோசடி வழக்கு: சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் - முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் மூலம் பணம் திரட்டி ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டை நீதிமணி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சதுரயுகவள்ளி நகரை சேர்ந்த ஆசிரியர் ஆனந்த், நீதிமணியின் மனைவி மேனகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் நீதிமணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சினிமா பிரபலங்கள் 7ஜி சிவா, சென்னை முருகானந்தம், ஸ்டூடியோ கிரீன் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஏற்கனவே ராமநாதபுரத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தநிலையில் அவர் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதன்படி அவரை ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்து, இரு நபர் ஜாமீன் அளித்து, முன்ஜாமீனில் செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்.1-ல் நீதிபதி ஜெனிதா முன்னிலையில் சரண் அடைந்தார். அவர் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி 2 நபர் ஜாமீன் அளித்து மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெனிதா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story