பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் வாங்க மக்கள் ஆர்வம் குறைந்த விலையில் கிடைப்பதால் மகிழ்ச்சி


பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் வாங்க மக்கள் ஆர்வம் குறைந்த விலையில் கிடைப்பதால் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 29 Oct 2020 2:54 AM GMT (Updated: 29 Oct 2020 2:54 AM GMT)

சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை ஆகிறது. குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

சென்னை, 

தமிழகத்தில் பல்லாரி, சாம்பார் வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே போகிறது. விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பண்ணை பசுமை கடைகள் மூலம் பல்லாரி வெங்காயத்தை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மராட்டியத்தில் இருந்து அந்த மாநில அரசின் உதவியுடன் தமிழக அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்து சென்னை மற்றும் புறநகரில் உள்ள பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது. கடந்த வாரம் முதற்கட்டமாக 48 டன் வெங்காயம் கொண்டு வரப்பட்டது. தற்போது 2-ம் கட்டமாக 100 டன் பல்லாரி வெங்காயத்தை வரவழைக்க தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரூ.45-க்கு விற்பனை

விண்ணை முட்டும் வெங்காய விலையால் வாடிப்போயிருந்த இல்லத்தரசிகள், பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் கிடைத்து வருவதால் ஓரளவு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைக்கு வரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் ஒருவருக்கு தலா 2 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை கடைகள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படுகிறது. தற்போது வெங்காயம் வாங்கும் ஆவலில் காலை 7.30 மணி முதலே மக்கள் படையெடுக்க தொடங்கி விடுகிறார்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வெங்காயம் வாங்கி செல்கிறார்கள்.

பண்ணை பசுமை கடையில் விற்பனை செய்யப்படும் இதர காய்கறி விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-

விலை பட்டியல்

வெண்டை-ரூ.53, புடலங்காய்-ரூ.54, கோவைக்காய்-ரூ.52, சுரைக்காய்-ரூ.53, பாகற்காய்-ரூ.58, கேரட்-ரூ.124, பீட்ரூட்-ரூ.62, உருளைக் கிழங்கு-ரூ.54, பீன்ஸ்-ரூ.96, கத்தரி (வரி)-ரூ.59, கத்தரி (உஜாலா)-ரூ.72, பச்சை மிளகாய்-ரூ.65, இஞ்சி-ரூ.72, கொத்தவரங்காய்-ரூ.65, அவரை-ரூ.88, தக்காளி-ரூ.26, நவீன் தக்காளி-ரூ.38, நூக்கல்-ரூ.48, சவ்சவ்-ரூ.35 முள்ளங்கி-ரூ.36, பல்லாரி-ரூ.45, சாம்பார் வெங்காயம்-ரூ.144, குடை மிளகாய்-ரூ.72, வெள்ளரி-ரூ.38, பீர்க்கங்காய்-ரூ.62, சேப்பக்கிழங்கு-ரூ.39, முருங்கை-ரூ.99, மாங்காய்-ரூ.112, எலுமிச்சை-70, கொத்தமல்லி-ரூ.9, புதினா-ரூ.9, கீரை-ரூ.12, வெங்காயத்தாள்-ரூ.14, வாழைக்காய்-ரூ.11, வாழைத்தண்டு-ரூ.11, வாழைப்பூ-ரூ.25, காளாண்-ரூ.62, தேங்காய்-ரூ.28, நெல்லிக்காய்-ரூ.72, பூண்டு-ரூ.156, மக்காச்சோளம்-ரூ.45, காராமணி-ரூ.65, முட்டைக்கோஸ்-ரூ.58, பரங்கிக்காய்-ரூ.35, சேனைக் கிழங்கு-ரூ.39, மரவள்ளி கிழங்கு-ரூ.45. 

Next Story