போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொத்தனார் மீது பெண் பரபரப்பு புகார் கடத்தப்பட்ட மகளை மீட்டுத்தர கோரிக்கை


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொத்தனார் மீது பெண் பரபரப்பு புகார் கடத்தப்பட்ட மகளை மீட்டுத்தர கோரிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2020 10:30 AM IST (Updated: 30 Oct 2020 10:30 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கடத்தப்பட்ட 16 வயது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று கொத்தனார் மீது தாயார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அறுகுவிளையைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 40). இவர் நேற்று உறவினர்களுடன் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் கடந்த 1½ ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு 16 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் கொத்தனார் வேலைக்காக எனது வீட்டின் பக்கத்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் எனது மகளிடம் நட்புமுறையில் பேசி ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துள்ளார். அறியா பருவம் கொண்ட எனது மகள் கடந்த 25-ந் தேதி தோழி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, மேற்கண்ட வாலிபரும், பள்ளிவிளையைச் சேர்ந்த அவருடைய தாயாரும் சேர்ந்து ஏமாற்றி கடத்திச் சென்றுள்ளனர். எனது மகளை அந்த வாலிபர் அடைத்து வைத்து பாலியல் கொடுமைகள் செய்து விடுவார்களோ என பயமாக உள்ளது.

மீட்டுத்தர வேண்டும்

வீட்டில் இருந்து சென்ற அன்று எனது மகள் 2 பவுன் தங்கச்சங்கிலியும், ½ பவுன் கம்மலும் அணிந்திருந்தாள். நான் இதுதொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தேன். வழக்குப்பதிவு செய்த அவர்கள் மேற்கண்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் போக்சோ உள்ளிட்ட சரியான சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே எனது மகளை கண்டுபிடித்து மீட்டுத்தரவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story