“வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை உள்ளது. இந்த சிலை அமைந்துள்ள மண்டபத்துக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் குளிர்சாதன வசதி செய்து கொடுத்து உள்ளார். இதன் தொடக்க விழா நேற்று இரவு நடந்தது.
விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து குளிர்சாதன வசதியை தொடங்கி வைத்தார். இதில் சின்னப்பன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், சிலை பராமரிப்பாளர் ஆறுமுகபாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
திரையரங்குகள்
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது. அவர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்.
நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவர்களுடன் ஆலோசனை நடத்தி, அறிவுரைகள் வழங்குகிறார். அவர் கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட உரிமை.
அ.தி.மு.க. வெற்றி
அ.தி.மு.க.வை பொறுத்த வரை நாங்கள் யாருடனும் ஒப்பிட்டு பார்ப்பது இல்லை. நாங்கள் முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளோம். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நாங்கள் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம். நாங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம். மற்றவர்கள் இதுவரை ஆட்சிக்கு வர முடியவில்லை என்பது போன்ற வேதனைகளை சொல்லிதான் வாக்கு கேட்க முடியும். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story